நெரிசலில் சிக்கிக்கொண்ட கார் ; 3 கி.மீ ஓடிச்சென்று அறுவை சிகிச்சை ; வைத்தியரின் செயலால் நெகிழ்ச்சி
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட மருத்துவர் ஒருவர், 3 கிலோமீற்றர் மருத்துவமனைக்கு ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
அறுவை சிகிச்சை
கர்நாடகாவின் பல இடங்களில் தீவிரமாக மழை பெய்ததால் பெங்களூரு உள்ளிட்ட போக்குவரத்து சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார்.
மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் என்பவர் தனது காரில் அறுவை சிகிச்சை செய்வதற்காக, சர்ஜாபூர் மணிபால் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போதே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். நெரிசலில் சிக்கிய மருத்துவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு நேரம் சென்றுகொண்டிருந்தது.
அவர் நின்ற இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூகுள் மேப்பை பார்த்தபோது இன்னும் 45 நிமிடங்கள் ஆகும் என்று காண்பித்துள்ளது. சிகிச்சை செய்ய நேரம் போய்விடும் என எண்ணி தன் காரை சாலையில் விட்டு விட்டு, மருத்துவமனைக்கு 3 கிலோமீற்றர் வரை ஓடிச் சென்று சிகிச்சையை மேற்கொண்டார்.
சிகிச்சையின் பின் மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் தெரிவிக்கையில், நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஓடுவது எனக்கு எளிதாக இருந்தது. நான் மருத்துவமனைக்கு மூன்று கிலோமீட்டர் ஓடிச் சென்று அறுவை சிகிச்சைக்கான நேரத்திற்கு சரியாகச் சென்றுவிட்டேன்”.
என்னுடைய காரை டிரைவர் ஓட்டி வந்ததால் அதனையும் என் பின்னால் எடுத்து வர முடிந்தது என்றார். மருத்துவரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரும் மருத்துவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.