காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் ; வாக்குமூலத்தால் வெளியான திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்
தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கிய குற்றச்சாட்டில், குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே குற்றச்சாட்டின் பேரில், குண்டசாலை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மெனிக்ஹின்ன காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி என்பதுடன், காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் இரட்டை சகோதரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணச் சம்பவத்தை மறைப்பதற்கும், பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்வதற்கும் குறித்த காவல் அதிகாரி எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பான பல தகவல்களை சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் வழங்கியுள்ளார்.
அதில், சம்பவத்திற்குப் பின்னர் தாம் குண்டசாலை பிரதேச சபை சாரதியின் வீட்டில் தலைமறைவாக தங்கியிருந்ததாகவும், சாரதியின் மூலமே காவல் அதிகாரியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சாரதியின் வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி, “எனது சகோதரன் காவல்துறையின் உயர் அதிகாரி; எதற்கும் பயப்பட வேண்டாம்” எனக் கூறி தமக்கு நம்பிக்கை அளித்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சாரதியின் மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவரிடமிருந்து பிரதான சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற நாளில், சாரதியின் மகன் அவருக்கு 50,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டையொன்றையும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகிய மூவரிடமும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுடன், குண்டசாலை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.