காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடலியல் மருத்துவர் ஷ்யாமா தர்ஷனியின் மரணம், கழுத்து நெரிக்கப்பட்டு செய்யப்பட்ட மனிதக் கொலை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 33 வயதுடைய ஷ்யாமா தர்ஷனியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் சிறுவர் ஒருவரை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிகாலை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஷ்யாமாவின் காதலன் எனக் கூறப்படும் 43 வயதுடைய நபரும், கொஸ்கொல்ல ஹொரம்பாவை பகுதியைச் சேர்ந்த அவரது 35 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருக்க உதவியதாகக் கூறப்படும் ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று இரவு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணைகளில், வெலிகம பகுதியைச் சேர்ந்த ஷ்யாமா தர்ஷனி கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
அதேவேளை, ஹோட்டல் அறையிலிருந்து ஷ்யாமாவின் உடலை பிரதான சந்தேகநபர் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்த நிலையில், அவை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனையின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், விசாரணைகளின் போது சந்தேகநபர், ஷ்யாமா தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அச்சம் காரணமாக சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனிய பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.