குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்த வைத்தியர்; இலங்கையில் சோகம்
கண்டி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவ் வைத்தியர் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ஆம் வார்டில் வசித்து வந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்ற பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ஆபத்தான நிலையில் இருந்து குழந்தையை மீட்ட பிறகு இந்த மருத்துவரின் நிலை மோசமடைந்ததால் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த அவர் தனது சேவைக் காலத்தில் இரவு பகலாக உழைத்து நோயாளிகளுக்காக தனது உயிரை தியாகம் செய்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.