யாரெல்லாம் திராட்சை பழத்தை சாப்பிடக்கூடாது தெரியுமா?
ஆன்டி ஆக்ஸுடன்ட், விட்டமின், மினரல் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்ட பழம். இதில் என்னதான் நன்மைகள் கொட்டியிருந்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொள்வோர் தவிர்ப்பது நல்லது. அப்படி யாரெல்லாம் திராட்சை சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்
திராட்சையில் சாலிசிலிக் ஆசிட் இருப்பதால் செரிமான பிரச்சனை இருப்போருக்கு பிரச்சனையை தீவிரமாக்கலாம். அதோடு வயிற்றுப்போக்கு பிரச்சனையையும் அதிகரித்துவிடும்.
அடிவயிற்று வலி, வயிற்று மந்தம், வாயுப்பிரச்சனை போன்ற தொந்தரவுகளையும் உண்டாக்கலாம். எனவே இதுபோன்ற பிரச்சனைகளால் அடிக்கடி நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் திராட்சையை தவிர்ப்பது நல்லது.
உடல் எடை குறைக்கும்
நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் எனில் திராட்சையை தவிர்த்துவிடுங்கள். இதில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். குறிப்பாக இதில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
கர்ப்பிணிகள்
திராட்சை ஆரோக்கியமானதுதானே என்று நினைத்தே ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக திராட்சை சாப்பிட்டால் கரு வளர்ச்சியை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு ஆய்வில், திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் சப்ளிமெண்ட்ஸ் வளரும் கருவில் கணைய பிரச்சனைகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.
பிறந்த குழந்தை
6 முதல் 12 மாதங்கள் கொண்ட குழந்தைகளுக்கு திராட்சை கொடுக்கவே கூடாது. அது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். குழந்தைகள் திராட்சையை நன்கு மென்று முழுங்கும் வரை திராட்சை கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
ஒவ்வாமை
உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்கிறதெனில் திராட்சையை தவிர்த்திடுங்கள். சரும அரிப்பு, எரிச்சல், தடிப்பு தடிப்பாக வீக்கம் போன்றவை வரலாம். உங்களுக்கு தீவிரமான அலர்ஜி பிரச்சனை உள்ளது எனில் தெரியாமல் கூட திராட்சையை சாப்பிடக்கூடாது. மீறினால் அது உயிருக்கே ஆபத்தாகவும் மாறலாம். இது ஆய்வு மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக பிரச்சனை
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் திராட்சையை தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்போரும் தவிர்க்க வேண்டும். அதேபோல் நீரிழிவு நோய் இருப்பவர்களும் திராட்சையை தவிர்ப்பது நல்லது.