உடல் எடையைக் குறைக்க உதவும் நட்ஸ் ; சாப்பிடுவதற்கு உகந்த நேரம் எது தெரியுமா?
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும் அதிகம் உதவுபவை பாதாம், முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள்தான். அது ஏன், எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் விஷயம், நட்ஸ் பொதுவாகவே வயிறு நிறைந்த உணர்வை எளிதில் கொடுக்கும். மேலும் தேவையற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடும் சூழல் குறையும். மேலும், நட்ஸானது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், உடலின் ஆற்றலை நாள் முழுவதும் சோர்வில்லாமல் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகின்றன. இவைமட்டுமன்றி நட்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

இப்படி எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட நட்ஸ் வகைகளைச் சாப்பிடும்போது அளவோடு சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். ஏனெனில், நட்ஸில் கலோரிகள் அதிகமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு (சுமார் 30 கிராம்) மட்டுமே நட்ஸ் சாப்பிட வேண்டும்.
அதிலும்கூட வறுத்த, உப்பு அல்லது சர்க்கரை சேர்த்த நட்ஸ் வகைகளைத் தவிர்த்து, இயற்கையான நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. பாதாம் போன்றவற்றை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் தோலை நீக்கிச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மைகளைத் தரும்.

அடுத்த விஷயம், எவ்வளவு நட்ஸ் சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே, எந்த நேரத்தில் நட்ஸ் உண்கிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் அவையே உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கும், எடை இழப்புக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.
அந்தவகையில் எனர்ஜி வேண்டும் என்பதற்காகவும், எடை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் நட்ஸ் சாப்பிடுவோர், காலை அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் டைமில் சாப்பிடலாம்.
இந்த நேரத்தில் நட்ஸ் சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆகியவை உங்கள் உடல் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன.

அதனால் உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மேலும் தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு உண்பதையும் தடுக்கின்றன என்பதால் எடை இழப்பும் சாத்தியப்படும்.
இதேபோல காலை உணவு அல்லது காலை ஸ்நாக்ஸில் நட்ஸ் சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் ரத்த சர்க்கரை மற்றும் ஆற்றல் அளவுகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் இரவு நேரத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும் என்பதால், படுக்கைக்குச் செல்லும் முன் நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
