கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார்.
வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தொற்றுநோய், எலிக்காய்ச்சல்
பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பேரிடருக்கு பின்னர் தொற்றுநோய், எலிக்காய்ச்சல் என்பன விரைவாகப் பரவுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கான சேவையை வழங்க தயாராக உள்ளனர் என்றும் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.