அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை பகிரவேண்டாம்
நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனியுரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கலாம் என சுட்டிகாட்டப்படுள்ளது.

தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்
அதோடு , இந்த படங்கள் மற்றும் விவரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிறரிடம் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.
சிறுவர்களை சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து 1929 சிறுவர் உதவி இலக்கத்திற்கு (Child Helpline Service) தெரியப்படுத்தவும் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி / சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்கவும்.
இந்த நேரத்தில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, அவர்களைப் பாதுகாப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் நமது அன்பைப் பயன்படுத்துவோமெனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.