மலேசியாவிற்கு வேலைக்காக செல்ல வேண்டாம்!
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் பலரை அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்
எனவே மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத் தவிர்க்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது, மலேசியாவிலுள்ள சட்டத்தின்படி, நாட்டிற்குள் நுழைந்த பின்னர் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க, 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதனையடுத்து மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் மலேசிய தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இலங்கை வரவுள்ளனர். அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வேலைவாய்ப்பிற்காக சுற்றுலா விசாவில் தனிநபர்கள் மலேசியாவிற்குச் செல்லக்கூடாது என பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்தகைய வேலைவாய்ப்பை வழங்கும் அல்லது உறுதியளிக்கும் நபர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.