அனுமதியை தவறாக பயன்படுத்த வேண்டாம்; இராணுவத்தளபதி எச்சரிக்கை
நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா பிறழ்வு பரவுவதை தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயம், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என கூறினார்.
அத்துடன் யாரை வேலைக்கு அழைக்க விரும்புகிறார்கள் என்பதை தொழில் நிறுவனத் தலைவர்களே தீர்மானிக்க முடியும் என்றும், குறித்த துறைகள் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறிய அவர் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பல்பொருள் அங்காடிகள், உணவக விநியோகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட மற்ற அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என்பதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எனினும் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் பெற வேண்டியவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இராவணுவத்தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.