இலங்கையில் தலைசுற்றவைக்கும் தங்கம் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இலங்கையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாக வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி, இன்றைய (17) நிலவரப்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக 3,345 டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரம்ப்பின் வரி அறிவிப்பால் எகிறிய தங்கத்தின் விலை
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவி இயக்குநர் இந்திக பண்டார,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்வை வரி அறிவிப்பால், உலக சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றார்.
உலகளவில் தங்கத்தின் விலை உயர்வை பாதிக்கும் காரணிகளில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் தங்கத்தின் விலை
இதற்கிடையில், உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது.
அதன்படி இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
அதேவேளை நேற்று (16) இலங்கை சந்தையில் 22 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 238,300 ரூபாவாகவும், 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 259,000 ரூபாவாகவும் காணப்பட்டது.