வடக்கு ரயில் ரயில் சேவைகள் பாதிப்பு
சீரற்ற காலனிலையால் தெதுரு ஓயா பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், குருணாகல் மற்றும் மஹோ ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து குருணாகல் வரை... யாழிலிருந்து மஹோ வரை
இதனால், கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்கள் குருணாகல் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ரயில்கள் மஹோ வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று (02) பெய்த மழையின் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி உயரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார கூறுகையில், மேலும் பல நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.