பெண்ணுடன் தகராறு; மகன்களின் தாக்குதலில் பலியான நபர்
கொழும்பு, தொட்டலங்க பாலத்திற்கு அருகில் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண்ணின் இரு மகன்கள் நடத்திய தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் மகன்களின் தாக்குதலில் , அதே இடத்தில் இரண்டு நாட்களாக விழுந்து கிடந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாலிபராவார். கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் போதையில் வந்து சந்தேக நபரின் தாயாரைத் திட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கோபத்தில், சந்தேக நபரும் அவரது சகோதரரும் இணைந்து அந்த நபரைத் தாக்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான சகோதரரைக் கைது செய்வதற்காகக் கிரேண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.