தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்தது.
சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரச தரப்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் ஒப்படைத்தனர்.
விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் பற்றிய முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.