டிட்வா புயலுக்குப் பின் உடனடி நடவடிக்கை ; பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாலங்கள் மூலம் நம்பிக்கை
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, 10 பெய்லி பாலங்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி இந்திய கடற்படைக் கப்பலான 'ஐஎன்எஸ் கரியால்' (INS Gharial) மூலம் விசாகப்பட்டினத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இந்த பாலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சூறாவளியால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவசர இணைப்புகளை ஏற்படுத்தி, இயல்பு நிலையை மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 'சிறப்பு பொருளாதாரப் பொதியின்' (Special Economic Package) ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண (HADR) உதவிகளைத் தொடர்ந்து, இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளிலும் இந்தியா துணை நிற்பதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.