இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. இவருக்கு வயது 84 வயது ஆகிறது.
‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர்.

தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் பெற்றவர்.
முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல், தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்துவருகிறார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார்.
தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து, பின்னர் சென்னை திரும்பினார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசியூவில் உள்ள பாரதிராஜாவுக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.