தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய இளைஞன் பரிதாப மரணம்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நிந்தவூர், அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடற்தொழில் மேற்கொள்பவர் என்பதுடன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளை எனவும் கூறப்படுகின்றது.
11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளை
உயிரிழந்த இளைஞன் இன்று விடுமுறை தினம் என்பதால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருந்த காய்ந்த ஓலையொன்றைப் பிடித்துள்ள நிலையில் திடீரென கால் வழுக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சடலமானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.