மாத்திரை வாங்கும்போது இதனை கவனிச்சிருக்கீங்களா? அவசியம் அறிந்துகொள்ளுங்கள்
தினமும் நமது உடலில் ஏற்படும் ஒரு பிரச்சினைகளுக்கு எல்லாம் நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. சிலர் மட்டுமே மருத்துவரிடம் செல்கின்றனர். பலர் நேரடியாக மருந்துக் கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் அது சரியான முறையா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்தைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் நிறைய பேரின் பதிலாக இருக்கும்.
முக்கியமாக நாமாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதாவது மருந்து அட்டைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை நாம் அதிகம் பார்ப்பதே இல்லை. மருந்து அட்டையின் பின்புறத்தில் பல குறியீடுகளின் உள்ளன, அதை பற்றி நாம் தெரிந்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதுவும் இந்த கொரோனா சமயத்தில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, செரிமான பிரச்சினை, பசியின்மை என எல்லாமே அறிகுறிகளாக சொல்லிவிட்ட பின்பு எது கொரோனா தொற்று நோய் எது சாதாரண பிரச்சினை என்றே தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவரால் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாத்திரைகள் எடுக்கப்பட வேண்டும். மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அவசரத்திற்கு ஒரு மருந்துக் கடையில் நீங்கள் வாங்கும் மருந்து என்றாலும், முதலில் மருந்து அட்டையைச் சரிபார்க்கவும். அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டும்.
மற்றொரு மிக முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் மருந்து அட்டையின் பின்புறத்தில் இருக்கும் சிவப்பு கோடு. சிவப்பு கோடு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அது போன்ற சிவப்பு நிற கோடுகள் இருந்தால் வாங்க கூடாது.
சிவப்பு கோடுகள் இருந்தால் அது ஆன்டிபயாடிக் மருந்து ஆகும். அதை அனுபவம் பெற்ற மருத்துவரின் ஆலோசனை இன்றியோ, தெரியாமல் அதிகப்படியான அளவு எடுத்துக்கொண்டாலோ உயிருக்கு ஆபத்தானதாகிவிடவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அதை அறிந்து உணர்ந்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.

