கடன் தொல்லையால் உயிரை மாய்த்தாரா சம்பிக்க நிலந்த? பொலிஸார் வெளியிட்ட தகவல்
கண்டி, யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும், மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மிரட்டல் விடுத்த தொழிலதிபர்
கடந்த மார்ச் மாதம் தனது காரை விற்றுத்தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து தொழிலதிபர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.