எரிக் சொல்ஹைமின் திடீர் வருகையின் பின்னனியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்?
ஐ.நா. சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹைமின் (Eric Solheim) இலங்கை வருகையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
ஊடகவியலாளர் கேள்வி
இதன்போது எரிக் சொல்ஹைமின் (Eric Solheim) இலங்கைக்கான திடீர் பயணம் ‘டயஸ்போராக்களின்’ தேவையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளரின் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ” வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கை பயணம் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன், அணிசேராக் கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை பயணிக்கின்றது. ஒரு சுயாதீன நாடாக, பிரிதொரு நாட்டின் அழுத்தங்களுக்கு எமது நாடு அடிபணியாது எனவும் கூறினார்.