இலங்கை - வெனிசுலா வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் உரையாடல்
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
நேற்று (23) இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது X சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இரு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அந்த X பதிவில் மேலதிக விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வெனிசுலாவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக சர்வதேச கவனம் அதிகரித்துள்ள பின்னணியில், இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்தப் பின்னணியில், வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, கடந்த ஜனவரி 05ஆம் திகதி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், வெனிசுலாவின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய பலத்தைப் பிரயோகிப்பதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச பிணக்குகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளல் மற்றும் நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியிருந்தது.