ஐபிஎல்லில் தோனி இந்த வீரராக விளையாடுவாரா? ரவிச்சந்திரன் அஷ்வின் வெளியிட்ட தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஒரு அணியால் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு அணிகளும் தமது அணியில் தக்கவைத்துக்கொள்ளப்போகும் வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மஹேந்திர சிங் தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத (Uncapped) வீரராகத் தக்க வைக்க அனுமதிக்குமாறு ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த வீரரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத (Uncapped) வீரராகக் கருதி குறைந்தபட்ச விலைக்குத் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை காணப்பட்டது.
குறித்த விதிமுறையை மீண்டும் பயன்படுத்தி தோனியை தக்க வைக்க அனுமதிக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.
மஹேந்திர சிங் தோனி கெப்டட் (capped) பிரிவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அஷ்வின்,
"தோனி அன்கெப்ட் வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட வருடமாக விளையாடாத அவர் நிச்சயமாக அன்கெப்ட் வீரராகத்தான் கருதப்படுகிறார்.
ஆனால் தோனி போன்ற வீரர் அன்கெப்ட் வீரராக விளையாடலாமா? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினை" என்று கூறினார்.
அத்துடன் தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி குறைந்த விலைக்கு தக்க வைப்பதில் எந்த தவறுமில்லை எனவும் ரவிச்சந்திரன் அஷ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.