ராஞ்சியில் தோனி–ரிஷப் பண்ட் இணைந்து பயிற்சி ; வைரலாகும் புகைப்படம்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சிக் கூடமொன்றில் தோனியுடன் இணைந்து ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட ரிஷப் பண்ட், 312 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
இதனிடையே, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில் இந்திய அணி தனது எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.