வெள்ளக்காடான திருப்பதி; பக்தர்கள் ஷாக்!
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருப்பதி திருமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பதியில் உள்ள ஏர் பை பாஸ் ரோடு, யுனிவர்சிட்டி ரோடு ஆகிய பகுதிகள் உட்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுவதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர திருப்பதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புயல் சின்னம் மேலும் வலுவடையும் நிலையில் மேலும் அதிகன மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இதனால் திருப்பதி நகரில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
அதோடு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக செல்வதற்கு பயன்படுத்தப்படும் மலை பாதைகளும் கனமழை காரணமாக நேற்று முதல் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வழியாக மட்டுமே திருப்பதி-திருமலை இடையே வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் திருப்பதி திருமலை இடையே பயணம் செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.