தேசபந்து தென்னகோனின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுமா? வெளிவந்த முக்கிய தகவல்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றபோது, வெலிகம பொலிஸார் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை மீறி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்யக் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.