சீனப் பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை; உண்மையை மறைத்த இராஜாங்க அமைச்சர்
நாட்டுக்குள் இரு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்கு வந்த சீனப் பிரஜையை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
சீனப் பிரஜையை நாடு கடத்தும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் பிடியாணை
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் நாட்டுக்கு வந்த சீன பிரஜையை கைது செய்ய சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த சீனப் பிரஜை நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது அவரது கடவுச்சீட்டு போலியானது என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சீனப்பிரஜை கைது செய்யப்பட்டார்.
சீன பிரஜை விடுமாறு கடிதம் அனுப்பிய அருந்திக்க பெர்னாண்டோ
இது இவ்வாறிருக்க , சீன பிரஜை கைதான மறுநாள் 19 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பில் தலையீடு செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி இருந்தார்.
அதில் , குறித்த சீனப் பிரஜை தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.
அவரிடமுள்ள சீனக் கடவுச்சீட்டை கவனத்திற்கொண்டு அவரை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின்னர் விடுவிக்கப்பட்ட சீனப் பிரஜை மீண்டும் கடந்த 22 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.