ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில்,
அத்தியாவசியத் தேவை உடையவர்களுக்கு மாத்திரம் நாளை (08) முதல் ஒருநாள் சேவை மூலம் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துதல் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைக் கையாளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை மற்றும் முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இயங்காது எனவும், கணினி கட்டமைப்பு சீர்செய்யப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.