திண்டாடும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் மார்ச் மாதத்தில் 74,890 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மாதம் இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50,000க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை 82,506 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து மக்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சித்துவருகின்றனர்.
இதன் காரணமாக கட்டுநாய விமான நிலையம் பரபரப்பாக இயங்கிவருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி நாட்டில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் , உள் நுழைவோர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.