சுகாதார அமைச்சரை பதவி நீக்குமாறு கோரிக்கை ;செல்வம் அடைக்கலநாதன்
மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, இளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும் பட்சத்திலேயே இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (10.09.2023) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதனால் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வடமாகாணத்தை பொறுத்தவரையில் தலைமை தாங்குகின்ற வைத்தியர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கூறி உள்ளனர்.
அவர்கள் விடா முயற்சியுடன் செயற்பட்டாலும் நிலவுகின்ற வைத்திய பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற மாத்திரைகள் போலியானதாக உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது. சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்.
அதனடிப்படையில் ஒட்டுமொத்த நாடுகளையும் சுகாதார அமைச்சர் ஏமாற்றியது மட்டுமின்றி இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் ஒட்டுமொத்த நாட்டையும் மக்களையும் ஏமாற்றி உள்ளனர்.
இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு எழ வேண்டுமாக இருந்தால் சுகாதார அமைச்சர் மாற்றப்பட வேண்டும். அவர் வெற்றி பெற்று விட்டார் என்ற எண்ணத்துடன் இருக்க முடியாது.
அரசை காப்பாற்றுவதற்காக அவரை வெற்றி பெற செய்துள்ளனர்.அவர் மாற்றப்பட வேண்டும். அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.