வைரல் வீடியோக்கள் கிளப்பிய சர்ச்சை ; டெல்லி விமான நிலைய நாய்கள் மாயம்
டெல்லி சர்வதேச வானூர்தி நிலையத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 'கடு' மற்றும் 'டோலு' ஆகிய இரண்டு நாய்கள் மாயமான விவகாரம், தற்போது விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த 'கடு' என்ற வயதான நாய், கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் காணாமல் போனமை குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் நாய்களைக் கடுமையாகக் கையாள்வதும், மயக்க நிலையில் இருக்கும் நாய்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது போன்ற காணொளிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, "கடு எங்கே? டோலு எங்கே?" (Where is Kaddu? Where is Dholu?) என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்திய விலங்கு நல விதிகளின்படி, கருத்தடை செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நாய்களை அவை பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் விட வேண்டும்.
ஆனால், வானூர்தி நிலைய நிர்வாகம் சட்டவிரோதமாக இந்த நாய்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த நாய்கள் யாரிடமும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவில்லை என்றும், அவற்றின் இருப்பிடம் குறித்த சிசிடிவி காட்சிகளை வழங்க வானூர்தி நிலைய நிர்வாகம் மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டெல்லி வானூர்தி நிலைய நிர்வாகம், தாங்கள் அரச மற்றும் விலங்கு நல சபையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதாகவும், எந்த நாயும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம், கடந்த மூன்று மாதங்களில் வானூர்தி நிலையப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சில நாய்கள் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறு பயணிகளை அறிவுறுத்தியுள்ள நிர்வாகம், மாயமானதாகக் கூறப்படும் நாய்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்பு மற்றும் விலங்கு நலன் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த மோதல் தற்போது இந்தியாவில் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.