மஹர சிறைச்சாலை பதற்றம் ; களத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளதுடன் ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோதல் நிலை
இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையினுள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
இதில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அங்கு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டனர்.