மஹர சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ; பாதுகாப்பு தீவிரம் ; களமிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர்
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைக்குள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

பதற்றநிலை
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சில அடிகள் முன்வந்து மக்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்திற்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.