மத்தல ராஜபக்க்ஷ விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்தல விமான நிலையத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது
இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கான விருப்பம் கோரல்கள் (Expressions of Interest) அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், மத்தல விமான நிலையத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தற்போது வரை மூன்று தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விமானத் திருத்தப் பணிகள், பயிற்சிகள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளைத் திறக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார்.