போராட்டத்தில் இறங்க முடிவு செய்த வடக்கு இ.போ.ச ஊழியர்கள்!
வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இ.போ. சபையின் வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளராகக் கடமையாற்றிய குணபாலச்செல்வம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் பணி ஓய்வு பெற்று சென்ற நிலையில் அவருடைய இடத்துக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்புத் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (18-01-2023) கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு தற்காலிக பிரதிப் பொது முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், வடக்கு மாகாணத்தில் பல மூத்த அதிகாரிகள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டிய தேவையில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே தமது கருத்துக்களை செவிமடுக்காது கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவர் வடக்குக்குத் தலைமை அலுவலகத்திற்கு வருவாராயின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.