அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவரது தம்பி ஹம்சிதனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜூன் 30ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் இறுதியாக உரையாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் மீது முதலில் சைபர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவரது தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்த சவுதி தரப்பும் மேன்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, நபியை அவமதித்தல் மற்றும் அந்த உள்ளடக்கத்தை பலரிடம் பரப்பியமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் வழக்கில் இணைக்கப்பட்டு, வழக்கு வேறு கோணத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தனது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தண்டனை தொடர்பிலும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்கள் குறித்தும் அனோஜன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனோஜனின் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.