யாழ் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம்; வெளியான பரிசோதனை அறிக்கை
கடந்த 14ஆம் திகதி யாழ், தென்மராட்சி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தென்மராட்சி, மீசாலை சந்திக்கு அண்மையாக இடம்பெற்ற விபத்தில் கொடிகாமத்தை சேர்ந்த 24 வயதான ராஜன் சிந்துஜன் என்பவர் உயிரிழந்தார். அவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது.
இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவிற்கடைய நேற்று முன்தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து, யாழ் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டது.
நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணையில், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உயிரிழந்தவரின் இறுதி நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.