யாழில் இளம் பெண் அரச உத்தியோகத்தர் மரணத்தில் மர்மம்; எழுந்துள்ள சந்தேகம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளரான இளம் குடுப்ப பெண்ணின் மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிற்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆறு மாத கர்ப்பிணியான 33 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நடந்தது என்ன?
படுக்கையறையில் இருந்த நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படிருந்தது.
இந்நிலையில் குறித்த பெண் அரச உத்தியோகஸ்தருக்கும் கணவருக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்ததாகவும் , இந்நிலையில் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் உள்ளதாக வும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் யாழ் பல்கலையில் படித்த காலத்தில் கூடப்படித்த மாணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கணவனின் நடத்தைகள் காரணமாக உயிரிழந்த பெண் விவாகரத்து பெற தயாரானதுடன், தனது சொந்த ஊரான வவுனியாவுக்கு மாற்றம் பெற்று செல்ல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பெண்ணுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பெண் தீயில் எரிந்த போது, குழந்தையும் அருகில் படுத்திருந்ததாகவும் , எனினும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை நுளம்புத்திரி படுக்கையில் பட்டு எரிந்ததாக உயிரிழந்த பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கி இருந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவமனைக்கு சென்றபோது , பெண்ணின் உடலில் மண்ணெணெய் வாசம் வந்ததாக மருத்துவமனையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர வீசாரணைகளை மேற்கொண்டால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.