அனர்த்தத்தில் காணாமல் போன 203 பேருக்கு மரணச் சான்றிதழ்
நாட்டில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்ததில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திடீர் அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் ஒரு நபர் காணாமல் போயிருந்தால், மேலதிக தகவல் ஏதும் கிடைக்காத பட்சத்தில், அவருக்கு மரணச் சான்றிதழ் வழங்க வசதி செய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு டிசம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்டது.

டிசம்பர் 2ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு
அதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்க இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்த உதவும். காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
ஒரு குடியிருப்பாளர் அனர்த்தம் காரணமாகக் காணாமல் போனதை கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியவுடன், மாவட்ட பிரதிப் பதிவாளர் சான்றிதழை வழங்க அதிகாரம் பெறுவார்.
ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம். அதன் பின்னர், பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்தினால் அந்த விண்ணப்பம் செயலாக்கப்படும்.
அதேவேளை அனர்த்தத்தில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு ஏற்கனவே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.