வைத்தியசாலையில் பிறந்த சிசு உயிரிழப்பு ; நடந்தது என்ன? கண்ணீர் விடும் பெற்றோர்
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் தாய் ஒருவர் பிரசவித்த குழந்தை உயிரிழந்த நிலையில், தமது சிசுவின் சடலத்தை மறைத்து வேறு சிசுவின் சடலத்தை ஊழியர்கள் காட்டுவதாக கண்னீர் விட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கண்ணீர் விடும் பெற்றோர்
மதுஷானி தனது குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிசுவின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது, சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
அது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் உறவினர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (27) பிற்பகல் பிரேத அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசு ஒன்றின் சடலத்தை வைத்தியசாலை ஊழியர்கள் பெற்றோரிடம் காண்பித்த நிலையில் அது தமது பிள்ளையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
DNA பரிசோதனை நடத்த வேண்டும்
சிசுவின் சடலம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் என வைத்தியசாலை அதிகாரிகளிடம் பெற்றோர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த சிசுவின் தந்தை கூறுகையில், "நான் இன்னும் என் குழந்தையின் முகத்தை கூட பார்க்கவில்லை. இவர்கள் எங்களை அங்கும் இங்கும் அனுப்புகிறார்கள். தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.