உயிரை புசித்த விருந்துபசாரம் ; அயல் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம்
அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம்
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது, குறித்த நபருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.