கொரோனா தொற்றுக்கு மத்தியில் தீவிரமாக பரவும் மற்றுமொரு ஆட்கொல்லி நோய்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மற்றுமொரு ஆட்கொல்லி நோயான டெங்கு தீவிரமாக பரவி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை 2021ஆம் ஆண்டில் இதுவரை 22,902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 2,979 பேர் ஒக்டோபர் மாதத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில் , இம்மாதத்தின் கடந்த 4 நாட்களில் 505 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , அடுத்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, வீடுகளுக்குச் வரும் டெங்கு ஒழிப்புக் குழுவினரின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.