அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நிறைவு
இலங்கை தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது.
நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதி செய்ய கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அனுமதி வழங்கியது.
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
குறித்த காலப்பகுதியில் வர்த்தகர்கள் மாத்திரம் 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். அரிசிக்கான கேள்வியை கருத்திற் கொண்டு காலவகாசம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 24 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டது.
அதற்கமைய, தனியார் துறையினர் நேற்று புதன்கிழமை (08) வரையான காலப்பகுதியில் மாத்திரம் 115,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.
இந்நிலையில், கையிருப்பில் 45,000 மெற்றிக் தொன் சிவப்பு அரிசியும், 70,000 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளன.
அதேசமயம் , அரிசி இறக்குமதிக்கான அனுமதி மீண்டும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித அறிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.