பகல் நேரத்தில் நடந்த பயங்கரம் ; ஐஸ்கிரீம் வியாபாரி தலையை துண்டித்து வீட்டிற்கு கொண்டு சென்ற நபர்
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தில், பகல் நேரத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பராபங்கியைச் சேர்ந்த பப்லு (25) என்ற ஐஸ்கிரீம் வியாபாரி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
மேலதிக விசாரணை
ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் கூலி வேலைகள் மூலம் குடும்பத்தை நடத்தி வந்த அவர், நேற்று வியாபாரத்திற்காக பர்சாவால் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் யாதவ் (50) என்பவருடன் பப்லுவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் விரைவில் மோதலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், தன்னிடம் இருந்த அரிவாளால் பப்லுவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் மட்டும் நின்றுவிடாமல், சம்பவ இடத்திலேயே பப்லுவின் தலையை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கொலைக்குப் பிறகு, சங்கர் யாதவ் எதுவும் நடக்காதது போல் பப்லுவின் துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து சென்று, சந்தேகநபரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
அப்போது, அவர் பப்லுவின் தலையை அருகில் வைத்தபடியே சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து பப்லுவின் தலையையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.