தாயின் சடலத்துடன் 14 நாட்கள் தனியாக வசித்து வந்த மகள்
இருவாரங்களாக உயிரிழந்த தாயின் சடலத்துடன் மகள் தங்கியிருந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் தெரியவருவதாவது, நுகேகொட - தெல்கந்த பெங்கிரிவத்தையில் உள்ள வீடொன்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நேற்று (23) பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஏற்கனவே அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதையும், அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருப்பதையும் கண்டனர். இறந்த பெண்ணின் மகள் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பெண்ணின் உடலில் துர்நாற்றம் வீசியதால் உடனடியாக பொலிஸார் அதை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தாயும் மகளும் மட்டுமே வீட்டில் வசித்து வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 14 நாட்களாக தாயின் சடலத்துடன் மகள் வீட்டில் வசித்து வருவதாக தெரிய வந்தது. மகளின் மனநோய் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கொல்லப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.