தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.