பிள்ளையானுக்கு திகதி குறிப்பு!
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூன் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம், இன்று (22) தீர்மானித்தது.
இந்த மனு உயலட நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.
பிள்ளையான் தாக்கல் செய்த மனு
பிள்ளையான் தாக்கல் செய்த மனுவில், சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டியின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக , ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் கூறுகிறார்.
தனது கட்சி அலுவலகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க, பிள்ளையான் மீதான விசாரணைக்காக அவரை 90 நாட்கள் தடுத்து வைக்க ஏப்ரல் 12 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தார்.