தனுஷ்க குணதிலக்க விவகாரம்: அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட்
அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் சிட்னி நீதிமன்றத்தில் (06-11-2022) தனுஷ்க குணதிலக்க முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒழுங்கீனமாக செயற்பட்டதை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், போட்டித் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான செய்திகள்
பெண்ணுடன் தகாத முறையில் நடந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது