தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கு: முதன்முறையாக வெளியான சிசிரிவி காட்சிகள்!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறப்படும் பெண்ணுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு தொடர்பான சிசிரிவி காட்சிகள் இன்றையதினம் (20-09-2023) முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு இன்று 3 அவது நாளாகவும் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி சாரா ஹாகெட் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டுவதற்கு முன்பு, தனுஷ்க குணதிலக்கவும், அந்த பெண்ணும் சிட்னியில் சில மணித்தியாலத்திற்கு முன்பு சந்தித்த காட்சிகளை அந்த காணொளி காட்டுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி, சிட்னியின் கிழக்கில் உள்ள 32 வயதான ஒரு பெண்ணுடன், உடலுறவு கொள்ளும்போது விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றியதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஜோடி முதலில் சிட்னி ஓபரா ஹவுஸுக்கு அருகிலுள்ள பாரில் சந்தித்ததுள்ளனர், அங்கு அவர்கள் சந்திக்கும் போது கட்டிப்பிடிப்பதைக் சிசிரிவி காட்சிகள் காட்டுகின்றன.
குறித்த இரண்டு பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு படகு வழியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதையும் காட்சிகள் காட்டுகின்றன.
மேலும், நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட சிசிரிவி காட்சிகளில், இரவு உணவிற்காக அருகிலுள்ள பிரான்கியின் பிட்சாவுக்குச் செல்வதற்கு முன், இருவரும் பாரில் சந்தித்து தழுவிய தருணத்தைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பெண்ணின் அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எவ்வாறாயினும், கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது அவருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது. இதன்போது சிசிரிவி காட்சிகள் முதன் முறையாக வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், தொடர்ந்தும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நாளையதினம் (21) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.