செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து ; தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதும் இவ்வாறான நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உளவியல் காரணிகளும் குடல் ஆரோக்கியத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இளைஞர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.