ஆபத்து நீங்கவில்லை; யாழ் மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்.மாவட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும்போது பாதிப்பு சற்று உயர்ந்தே காணப்படும் என்றும், எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மீண்டும் ஒரு பொது முடக்கத்தை அறிவிக்கும் அளவிற்கு கொரோனா அலையை உருவாக்கிவிடக்கூடாது எனவும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கோரிக்கை விடுத்துள்ளார் .
எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை மதித்து அவற்றை பின்பற்றி நடந்து கொள்வதன் ஊடாக மாவட்டத்தினதும், நாட்டினதும் இயல்புநிலையை பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்.மாவட்டம் பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மாத்திரமே தடைப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினரும், இலங்கை போக்குவரத்து சபையினரும் தங்களுடைய சேவையினை ஆரம்பித்துள்ளனர். அதோடு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மட்டுப்பாடுகளுடன் ஏனைய செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் தனியார் கல்வி செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 200க்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்வியமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் கடந்தகாலங்களில் ஒப்பிடும்போது தொற்று நிலைமை அதிகரித்த நிலையே காணப்பட்டது. எனவே தற்போதுள்ள இயல்புநிலையினை பொதுமக்கள் உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நவராத்திரி விரதம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதனால் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீறாது தமது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதோடு தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.
எனவே மீண்டும் ஒருபோதும் பொது முடக்கத்துக்கு வழிவகுக்காது இயல்பான நிலையினை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.